10 Myths About Meditation (Myths about Meditation in tamil)

 

 

உங்களுக்கு ஏதேனும் குழப்பம் இருந்தால் தீர்ந்து விடும் என்னும் நம்பிக்கையுடன் தியானத்தினைப் பற்றி இங்கே பட்டியலிட்டுத் தருகின்றோம்:

#1 தியானம் ஒரு முகப் படுத்துதல் ஆகும்

உண்மையில் தியானம் ஒருமுகப் படுத்தாமல் இருப்பதுவே ஆகும். தியானத்தின் பயனாக மனம் ஒருமுகப் படுத்துதலை அடையலாம். மனதை ஒருமுகப் படுத்துவதற்கு முயற்சி தேவை. ஆனால் தியானம் முற்றிலும் இளைப்பாருதலே ஆகும். தியானம் என்பது விட்டு விடுதல். அவ்வாறு நிகழும்போது நீங்கள் அழ்ந்த ஒய்வினைப் பெறுகின்றீர்கள். மனம் நன்கு இளைப்பாறும்போது, உங்களால் பின்னர் நன்கு மனதை ஒருமுகப் படுத்த முடியும்.

#2 தியானம் சமய சம்பந்தமானது

யோகாவும் தியானமும் சமயங்களுக்கு அப்பாற்பட்ட பழமையான பயிற்சிகள். தியானத்திற்கு சமயம் ஒரு தடை அல்ல. உண்மையில் தியானம் அனைத்து சமயங்களையும், நாடுகளையும், நம்பிக்கைகளையும் ஒன்றிணைக்கக் கூடியது. சூரியனின் ஒளி அனைவருக்கும் உரியது. காற்று அனைவரின் மீதும் வீசுகின்றது. தியானமும் அனைவருக்கும் நன்மை அளிக்கும்." ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்கள்," அனைத்துப் பின்புலங்கள் உள்ள எல்லா சமய, கலாசாரங்களையும் சேர்ந்த மக்களையும் ஒன்றிணைந்து தியானம் செய்து கொண்டாட ஊக்குவிக்கின்றோம் " என்று கூறுகின்றார்.

#3 பத்மாசனத்தில்தான் அமர வேண்டும்

பதஞ்சலியின் யோகா சூத்திரம் ஒரு அறிவியல் நிறைந்த எவ்வாறு மனத்தைக் கையாளுவது என்பதைப் பற்றி விளக்கமாகக் கூறும் நூல், ஸ்திரசுகமசனம் என்னும் சூத்திரத்தில் பதஞ்சலி தியானம் செய்யும்போது உடல் வசதியாகவும் ஸ்திரமாகவும் இருக்க வேண்டியது முக்கியம் என்று கூறுகிறார். அது தியானத்தில் ஆழ்ந்திருக்க உதவும். நாற்காலி மற்றும் சோபாவில் கால்மேல் கால் போட்டு அமர்ந்தாலும் சரிதான். எனினும் தியானம் செய்யும்போது, முதுகுத் தண்டு நேராக, தலை, தோள்கள் கழுத்து ஆகியவை தளர்வாக இருப்பது நலம்.

#4 தியானம் முதியவர்களுக்கானது

தியானம் அனைவருக்குமானது. எல்லா வயதினருக்கும் வாழ்க்கைக்குப் பயனளிக்கக் கூடியது. எட்டு அல்லது ஒன்பது வயதிலிருந்து தியானம் செய்யத் துவங்கலாம். குளியல் உடலைச் சுத்தப் படுத்துவது போன்று, தியானம் மனதிற்கு குளியலாக அமைகின்றது.

தியானப் பயிற்சிக்குப் பின்னர் முன் போல எனக்குக் கோபம் வருவதில்லை என்று பகிர்ந்து கொள்கின்றார் சன்ட்ரா என்னும் நடுநிலைப் பள்ளி மாணவி. ஒரு சில நிமிஷங்கள் செய்யும் தியானம் என்னை நாள் முழுவதும் அமைதியாக வைத்திருக்கின்றது என்று கூறுகிறார் 19 வயதான கேரன். 25 வயதான மற்றொரு இளைஞர் தியானம் எனக்கு உற்சாகத்தையும் அளித்து என்னைச் சுற்றி நேர்மறை அலைகளைப் பரப்புவதற்கு உதவுகின்றது என்று கூறுகின்றார்.

#5 தியானம் உங்களை வசியப் படுத்துவது போன்றதாகும்

வசியப்படுத்துததலுக்கு மாற்றே தியானம் ஆகும். வசியப் படுத்துதலில் ஒருவருக்குத் தனக்கு நிகழ்வது எதுவும் தெரியாது. ஆனால் தியானத்தின் போது முழு விழிப்புணர்வு ஒவ்வொரு க்ஷணமும் இருக்கும். வசியப்படுத்துதலில் மனதில் உள்ள பதிவுகளின் வழியாகவே அவன் அழைத்துச் செல்லப் படுவான். தியானம் இப்பதிவுகளை அழித்து, விழிப்புணர்வினை புதியதாகவும் தெளிவாகவும் ஆக்குகின்றது. வசியப் படுத்துதலில் வளர்சிதைச் செயல்பாடு அதிகரிக்கும். தியானம் அதைக் குறைக்கும். ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்கள், ப்ராணாயாமும் தியானமும் ஒழுங்காகச் செய்பவர்களை எளிதில் வசியப் படுத்த முடியாது என்று கூறுகின்றார்..

#6 எண்ணங்களைக் கட்டுப் படுத்துவதே தியானம்

எண்ணங்கள் நம் அழைப்பின் பேரில் வருவதில்லை. அவைகள் நம்மை வந்தடைந்த பின்னரே அவற்றின் வருகையைப் பற்றி விழிப்புணர்வை அடைகின்றோம். வானத்தில் உள்ள மேகங்களைப் போன்றவை எண்ணங்கள். அவை தாமாகவே வந்து போகும். அவைகளைக் கட்டுப் படுத்துவது ஓர் முயற்சி ஆனால் மனதை தளர்த்துவதற்குத் திறவுகோல் முயற்சியற்ற நிலை என்பதேயாகும். தியானத்தில் நாம் நல்ல எண்ணங்களுக்காக ஏங்குவதும் இல்லை, கெட்ட எண்ணங்களை வெறுப்பதும் இல்லை. நாம் எண்ணங்களுக்குச் சாட்சியாகவே இருக்கிறோம்,படிப்படியாக அவற்றைக் கடந்து உள் ஆழ்ந்த மௌனமான அமைதிப் பரப்பினை எட்டுகின்றோம்.

#7 பிரச்சினைகளிலிருந்து தப்பி ஓடுவதே தியானம்

மாறாக, தியானம் பிரச்சனைகளை ஓர் புன்முறுவலுடன் சந்திக்கும் அதிகாரத்தினை உங்களுக்கு அளிக்கின்றது. இனிமையான ஆக்கபூர்வமான வழியில் நிகழ்வுகளைச் சமாளிக்கும் திறன்களை வளர்த்துக் கொள்ள உதவுகின்றது. நிகழ்வுகளை எவ்வாறுள்ளதோ அவ்வாறே ஏற்றுக் கொள்ளும் திறமை பெற்று, கடந்த காலத்தினைப் பற்றி எண்ணி மறுகிக் கொண்டிராமல், வருங்காலத்தினைப் பற்றிக் கவலைப் பட்டு கொண்டிராமல் செயல் பட உதவுகின்றது. தியானம் உள் வலிமையை மற்றும் சுய மரியாதையை வளர்க்கின்றது. மழை காலத்தில் குடையைப் போன்று செயல் படுகிறது. சவால்கள் தோன்றும், ஆயினும் நாம் நம்பிக்கையுடன் முன்னேறலாம்.

#8 ஆழ்ந்து செல்ல பல மணி நேரம் தியானத்தில் அமர வேண்டும்

ஆழ்ந்த தியான அனுபவத்திற்குப் பல மணி நேரங்கள் அமர வேண்டியதில்லை. உங்களது இருப்பின் மூலமான உள் ஆழத்திலுள்ள ஆத்மாவுடன் தொடர்பு ஒரு நொடிக்கும் குறைவான நேரத்தில் நிகழக் கூடும். அழகான இந்த உள்நோக்கிய பயணத்திற்கு ஒவ்வொரு நாளும் காலையும் மாலையும் 20 நிமிடங்கள் சஹஜ் சமாதி தியானம் செய்தால் போதும். தினமும் பயிற்சி செய்வதால், உங்கள் தியானத்தின் தரம் மேம்படும்.

#9 தியானம் செய்தால் சந்நியாசியாகி விடுவீர்கள்

ஆன்மீக வழியில் செல்வதற்கு நீங்கள் இப்பொருளுலகை விட்டு விட வேண்டிய தேவையே இல்லை. உண்மையில் தியானம் சீராக செய்து கொண்டிருந்தால், உங்களுடைய உலக வாழ்வியல் இன்பம் அனுபவித்தல் அதிகப் படும். தளர்வான அமைதியான மனதுடன் நீங்கள் மகிழ்ச்சியாக வாழ்வீர்கள், உங்கள் குடும்பம் மற்றும் சுற்றுயிருப்பவர்களையும் மகிழ்விப்பீர்கள்.

#10 நீங்கள் குறிப்பிட்ட சில நேரங்களில் மட்டுமே குறிப்பிட்ட திசைகளை நோக்கித் தியானம் செய்ய முடியும்

எந்த நேரமும் உகந்த நேரமே. அனைத்துத் திசைகளுமே நல்லவை. ஒரே விஷயம் நீங்கள் நினைவில் கொள்ள வேண்டியது என்னவென்றால், உங்கள் வயிறு நிறைந்திருக்கக் கூடாது, ஏனெனில் அப்போது தியானத்திற்குப் பதில் உறக்கத்திற்குச் சென்று விடுவீர்கள். ஆயினும், சூரிய உதய மற்றும் சூரிய அஸ்தமன நேரத்தில் தியானம் செய்வது நல்ல பயிற்சியாகும் அது உங்களை அமைதியாகவும் ஆற்றலுடனும் நாள் முழுவதும் வைத்திருக்கும்.

இந்தக் குறிப்புகள் தியானத்தினைப் பற்றி அதன் பலன்களைப் பற்றி மற்றும் அதன் அவசியத்தைப் பற்றி தெளிவினை ஏற்படுத்தும் என்று நம்புகிறோம். எங்களுடன் தியானம் செய்து தியானம் செய் இந்தியா என்பதில் பங்கு பெறுங்கள்.

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்களின் ஞான உரைகளிலிருந்து எடுக்கப் பட்டது

பட வரைவு: நிலாதரி தத்தா