உண்மையான வெற்றி (Secret of success in tamil)

பூஜ்ய ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்களின் அருளுரை

வாழ்க்கையில் பல செயல்களை உங்களுக்கு சுகமாக இருப்பதால் செய்கின்றீர்கள். வாழ்க்கையில் நீங்கள் தேடுவது சுகம்.உங்களுக்கு ஏன் பணம் தேவை? சுகமாக வாழ்வதற்கு. எந்தத் திசையில் எந்தத் தேவையாயினும் அவற்றுக்கெல்லாம் ஒரே காரணம் - சுகம்.

சுகத்தில் பல நிலைகள் உள்ளன. ஒன்று உடல் ரீதியானது- புல்லில் அமர்ந்திருந்தால், குஷன் இருந்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணுகிறீர்கள்.மற்றொன்று மன ரீதியானது. இது மிக அவசியத் தேவை. நீங்கள் வசதியான வீட்டில் வசதியான படுக்கையில் படுத்திருந்தாலும், மனம் சுகமாக உணராததால், தூக்கம் வராது. அடுத்தது உணர்ச்சி பூர்வமான சுகம். - உங்களுக்கு எல்லாமே இருந்தாலும், நெருக்கமாகப் பேச யாருமில்லை, அல்லது நெருக்கமானவர் உங்களுடன் பேசுவதில்லை, அல்லது யாரேனும் உங்களைப் புண் படும்படிப் பேசி விட்டனர், அப்போது உங்களுக்கு உணர்ச்சிபூர்வமான சுகம் இல்லாமல் போய் விடுகிறது. அடுத்தது,, ஆன்மீக சுகம். ஆத்மாவின் சுகம், முழுமையான அமைதி, உள்ளிருந்து தடையற்ற அமைதியும் ஆனந்தமும் - சுகம் என்பது நீங்கள் நீங்களாகவே இருப்பதுதான்.

சுகம் எங்கேயிருக்கின்றது? உடலிலா அல்லது மனதிலா? இரண்டும் கலந்ததே அது. சில சமயங்களில் உடல் சுகமாக இல்லாதபோது மனமும் சரியாக இருக்காது. அது போன்று மனம் சுகமாக இல்லையெனில் உடல் சரியாக இருக்காது. உடலை விட மனதின் சுகம் முக்கியமானது. மனம் உடலை விட மூன்று மடங்கு சக்தி வாய்ந்தது. எனவே மன சுகம் உடல் சுகத்தை விட மூன்று மடங்கு முக்கியமானது.

சுகம் என்பது அர்ப்பணிப்பை அடிப்படையாகக் கொண்டது. பிறரது பொறுப்பு உங்களுக்கு சுகத்தினை அளிக்கலாம். உதாரணமாக பால் எடுத்து வரும் பால்காரனது பொறுப்புணர்வு உங்களுக்கு வசதியினை அளிக்கலாம். அது போன்று உங்களது பொறுப்புணர்வு பிறருக்குப் பயனுள்ளதாக இருக்க வேண்டும். சில சமயங்களில், சிலர், " நான் இந்தப் பொறுப்பில் மாட்டிக் கொண்டு விட்டேன், அதனால் சந்தோஷமின்றி இருக்கிறேன்" என்று கூறுவதுண்டு. எல்லாப் பொறுப்புக்களும் ஆரம்பத்திலிருந்தே எளிதாக இருக்கும் என்று எண்ணாதீர்கள். மருத்துவப் படிப்பினை முடிக்க வேண்டும் என்றால், நடுவில் பல கஷ்டங்கள் கண்டிப்பாக ஏற்படும்.

ஆயினும், அர்ப்பணிப்பு தடைகளைத் தாண்டி உங்களை அழைத்துச் செல்லும். அதிக வெற்றியினைத் தரும். எந்த அளவு அதிக அர்ப்பணிப்புடன் இருக்கிறீர்களோ, அந்த அளவு உங்களது உழைப்புத் திறன் கூடும். அர்ப்பணிப்பு என்பது என்ன ? உங்களால் எதைச் செய்ய முடியும் என்று எண்ணுகிறீர்களோ அதை விட அதிக அளவு ஆகும்.

ஒரு குவளைத் தண்ணீர் குடிக்கிறேன், அல்லது ஒரு கிலோமீட்டர் நடக்கிறேன் அதுவே என் அர்ப்பணிப்பு என்று கூறாதீர்கள், எப்படியிருந்தாலும் அதைச் செய்து விடலாம். உங்களது திறன்களை நீட்சி செய்து கொள்வதே அர்ப்பணிப்பு. எங்கும், வெற்றி என்பது பற்றி அதிகப் பேச்சாக இருக்கின்றது. அனைவருக்கும் வெற்றிகரமாக இருக்க வேண்டும் என்னும் விருப்பம் உள்ளது. வெற்றி என்றால் என்ன என்று யோசித்துப் பார்த்திருக்கின்றீர்களா? அது உங்களது திறன்களைப் பற்றிய அறியாமையே ஆகும். உங்களது திறன்களுக்கு ஓர் எல்லைக் கோடு ஏற்படுத்திக் கொண்டு எப்போதெல்லாம் அதைத் தாண்டுகிறீர்களோ அப்போதெல்லாம் வெற்றியடைந்து விட்டதாகக் கூறிக் கொள்கிறீர்கள். வெற்றி என்பது உங்களுடைய சுயத்தின் திறனைப் பற்றிய அறியாமையே ஆகும். ஏனெனில் இவ்வளவுதான் செய்ய முடியும் என்று நீங்களே கருதிக் கொள்கின்றீர்கள்.

நான் வெற்றிகரமாக ஒரு வாழைப் பழத்தை சாப்பிட்டு விட்டேன் என்று ஒருபோதும் கூற மாட்டீர்கள் ! ஒரு வரையறையை ஏற்படுத்தும்போது, உங்களுடைய சுயத்தின் சக்தியை, உங்கள் மெய்யுணர்வின் சக்தியை வரையறுக்கின்றீர்கள். ஒவ்வொரு சமயமும் எதையாவது அடையும்போது, நீங்கள் கர்வமாக உணருகின்றீர்கள் அல்லவா? உண்மையில் நீங்கள் வருத்தப் பட வேண்டும். எளிதாகச் செய்யக் கூடிய ஒன்றினைப் பற்றிக் கர்வப் படுகிறீர்கள், உண்மையில் உங்களால் ஏராளமாகச் செய்ய முடியும். வெற்றியடையும்போது கர்வமும், தோல்வியடையும்போது வருத்தமும் அடைகின்றீர்கள். இரண்டுமே உங்களை ஆனந்தத்திலிருந்தும், உங்களுக்கிருக்கும் சிறப்பான ஆற்றலிலிருந்தும் அகற்றி விடுகின்றன.

எனவே, தெய்வத்திடம் சரணடைவதே சிறப்பானது. வெற்றியடைந்தால் என்ன? அது இன்னொரு நிகழ்வு அவ்வளவுதான். இதை விட அதிகமாகச் செய்ய முடியும். ஏதேனும் ஒன்றைச் செய்ய முடியவில்லையென்றால் அது முடியவில்லை அவ்வளவுதான் ! இந்த க்ஷணம் அதை மீண்டும் செய்ய விரும்புகிறீர்களா? . இதைச் செய்தே ஆக வேண்டும் என்று ஒரு சங்கல்பம் எடுத்துக் கொள்ளுங்கள். அப்போது குற்ற உணர்வு, தீர்ப்பு உணர்வு எதுவுமின்றி நீங்கள் திறம்படச் செய்வீர்கள். வெற்றி தோல்வி இரண்டில் எதுவாயினும், இந்த அமைதி நிலை தான் உங்களை உண்மையான வெற்றிக்கு அழைத்துச் செல்லும்.